வெஜிடபிள் பஃப்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

வெஜிடபிள் பஃப்

சைவம்

கையால் அடுக்கு அடுக்காக மடித்த மைதா மாவை மசாலா கலவை காய்கறி பூரணத்துடன் முக்கோணமாக்கி பொன்னிறமாக அடுக்குகளாக சுடப்படும் பஃப்.

தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
45 நிமிடங்கள்
மொத்த நேரம்
105 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 1/2 ஆழாக்கு மைதா மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் வனஸ்பதி (குவித்து)
  • 1 டீஸ்பூன் உப்பு
  • ஐஸ் தண்ணீர் (மாவு பிசையத் தேவையான அளவு)
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3 அல்லது 4 உருளைக்கிழங்கு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் உரித்த பட்டாணி
  • தேவையான அளவு உப்பு
  • 1 காரட்
  • 5 பீன்ஸ்
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1 எலுமிச்சம் பழம்
  • எண்ணெய் (தேவைக்கேற்ப)
  • இஞ்சி (1/2 அங்குலத் துண்டு, அரைக்க)
  • 3 பல்லு பூண்டு (அரைக்க)
  • 2 பச்சை மிளகாய் (அரைக்க)
  • பால் அல்லது முட்டையின் வெள்ளைக் கரு (மேலே தடவ)

செய்முறை

  1. மைதா மாவோடு உப்பு சேர்த்து ஐஸ் தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும். கல்லிற்கு எண்ணெய் தடவி, மாவை நன்றாக பலமுறை அடித்து எலாஸ்டிக் தன்மை பெறும்வரை பிசையவும். பிசைந்த மாவை ஈரத்துணி கொண்டு மூடி அதன் மேல் தட்டு வைத்து 1/2 மணி நேரம் வைக்கவும்.
  2. மசாலா செய்முறை: கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக அரியவும். உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் அரிந்த காய்கறிகளை குக்கரில் வேகவைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் எடுத்து மசிக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சீரகம் தாளித்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுதைச் சேர்க்கவும். இதோடு அரிந்த வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். கரம்மசாலா பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கலந்து வேக வைத்து வடித்த காய்கறிகளைச் சேர்க்கவும். நல்ல வாசனை வரும்வரை சில நிமிடங்கள் வதக்கவும். எலுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  4. பஃப் செய்யும் முறை: பிசைந்து வைத்த மாவை மறுபடி ஒருமுறை பிசையவும். வனஸ்பதியை அடுப்பில் வைத்து உருக்கி மறுபடி ஃப்ரிஜ்ஜில் 10 நிமிடம் வைக்கவும். உறைந்தவுடன் கைகளால் நன்றாகக் குழைத்து மெத்தென்று வெண்ணெய் போல வரும்படி செய்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். இதை மூன்று சரி சமமான பாகங்களாகப் பிரித்து வைக்கவும்.
  5. சமையல் ரூம் மேடை மேல் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மைதா மாவை அதன்மேல் மிக மெல்லிய செவ்வகமாக உருட்டவும் (rectangle). உருட்டுவதற்கு மேல் மாவாக மைதாவையே உபயோகப்படுத்தவும். செவ்வக மைதா சப்பாத்தியை மனதிற்குள் மூன்று சரிசமமான பாகமாக பிரித்துக் கொள்ளவும். குழைத்த வனஸ்பதியில் ஒரு பாகத்தை எடுத்து உருட்டிய செவ்வகத்தில் 2/3 பாகத்தின் மேல் சுற்றிலும் 1/2 அங்குலம் இடம்விட்டு பூசவும்.
  6. வனஸ்பதி பூசாத காலி பாகத்தை முதலில் உள்பக்கம் நோக்கி மடிக்கவும். அதற்குப் பிறகு பூசியுள்ள பாகத்தில் 1/3 பாகத்தை அதன் மேல் மடிக்கவும். லேசாக குழவியால் உருட்டவும். மறுபடியும் ஒரு செவ்வகம் கிடைக்கும். இதையும் அதே போல வனஸ்பதி பூசி மடிக்கவும். மூன்றாவதாக ஒரு முறை அதே போல செய்யவும். (உருட்ட கடினமாக இருந்தால் முதல் தடவை மடித்ததும் ஒரு ஈரத்துணியால் மூடி 10 நிமிடம் ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து அதன் பிறகு செய்யவும்)
  7. இப்போது கிடைத்துள்ள செவ்வகத்திற்கு ஒன்பது அடுக்குகள் இருக்கும். இதை 3" x 4" அங்குலத்திற்கு சிறிய செவ்வகங்களாக கத்தியால் வெட்டி மத்தியில் சிறிதளவு மசாலா வைத்து குறுக்கில் மத்தியில் மடிக்கவும் (மடித்ததும் பஃப் முக்கோணமாக இருக்கும்). சிறிதளவு ஈரம் தடவி ஒட்டவும். ஈரத்துணி கொண்டு மூடி 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
  8. ஓவனை 250°C வைத்து சிறிது நேரம் சூடாக்கவும். பேக் செய்யும் டிரேயில் சிறிது தண்ணீர் தடவி செய்த பஃப் முக்கோணங்களை அதில் சிறிதளவு இடைவெளி விட்டு அடுக்கவும். பஃபின் மேல் சிறிதளவு பால் அல்லது முட்டையின் வெள்ளைக் கருவை தடவி மேல் பாகம் பொன்னிறமாகும் வரை ஓவனில் வைக்கவும் (40 லிருந்து 50 நிமிடம் ஆகலாம்). சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  9. குறிப்பு: மாவை கலக்கும் போது சப்பாத்திமாவு போல கலக்கவும். பிறகு நன்றாக அடித்துப் பிசைந்து தளர்த்தியாக்கவும். அப்போதுதான் மெலிதாக இட வரும். ஓவன் இல்லாதவர்கள் 50/50 சாண்ட்விட்ச் டோஸ்டரில் வைத்து கூட பஃப் செய்யலாம். வனஸ்பதியோடு வெண்ணெய் மற்றும் மார்ஜரின் சேர்த்து கலந்தும் பஃப் செய்யலாம். பஃபை நீள சதுரமாகவும் செய்யலாம். சதுர வடிவில் வெட்டி இரண்டாக மத்தியில் மடித்தால் நீள சதுரம் கிடைக்கும். சிறிதளவு தண்ணீர் பூசி ஒட்டாவிடில் பேக் செய்யும்போது அடுக்குகள் பிரிந்து மசாலா வெளியில் தெரியும்.