ஜவ்வரிசி கட்லெட்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

ஜவ்வரிசி கட்லெட்

சைவம்

மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசி, வதக்கிய வெங்காயம், அரைத்த தழை விழுதுடன் கலந்து பொன்னிறமாக பொரிக்கப்படும் ஜவ்வரிசி கட்லெட்.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 1/2 கப் ஜவ்வரிசி
  • 6 துண்டுகள் ரொட்டி
  • 4 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (தேவையான அளவு)
  • 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலைப் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 5 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 1/2 அங்குலத் துண்டு இஞ்சி (அரைக்க)
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை (அரைக்க)
  • 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை (அரைக்க)
  • 1 டேபிள் ஸ்பூன் புதினாத் தழை (அரைக்க)
  • 1 சிட்டிகை உப்பு (அரைக்க)

செய்முறை

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து கட்டியில்லாமல் நன்றாக மசிக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி முழுகும்வரை தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும் (அளவில் பெரிய ஜவ்வரிசியாக இருந்தால் அதிக நேரம் ஊற வைக்கவும்).
  2. வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கியதும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  3. கடைசியில் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  4. ரொட்டித் துண்டங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி கெட்டியாகப் பிழிந்து உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்கவும். ஊறிய ஜவ்வரிசியை உதிர்த்துவிட்டு உருளைக்கிழங்கோடு சேர்க்கவும். பாதி ரொட்டித் தூள் மற்றும் வேர்க்கடலைப் பொடியையும் சேர்க்கவும்.
  5. கட்லெட் போல செய்து மீதி ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து தோசைக்கல்லில் அதிக எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சிவக்க சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.