புரோட்டா

வகைகள்சப்பாத்தி வகை

பொருட்கள்

  • 500 கிராம் மாவு
  • 1 மேசைக்கரண்டி வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 300 மி.லி தேங்காய் எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில்
  • தண்ணீர்

செய்முறை

  1. மாவைச் சலித்து பாத்திரத்தில் போட்டு வெண்ணெய், உப்பு இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் விட்டு ஒன்று சேரப் பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். 500 கிராம் மாவில் 8 புரோட்டா வரும். உருண்டைகளின் மீது தேங்காய் எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். இந்த எண்ணெயையே புரோட்டா விரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளலாம். மாவு உருண்டைகளை, எண்ணெய் தடவிய பெரிய பலகையில் மெல்லியதாக விரிக்கவும் - ஒரு அடி நீளம் விரிக்கலாம். மெல்லிய துணி போன்றிருக்கும் மாவை சேலைக் கொசுவம் மடிப்பது போல் குட்டிச் சுருக்கங்கள் செய்து இருபுறமும் சுருட்டிக் கொண்டு வந்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து விடவும். இவ்வாறு புரோட்டா இட்டபின், தோசை சட்டியை சுடவைக்கவும். புரோட்டா சுருக்கிய உருண்டைகளை கைவிரல் கொண்டு சுருக்கம் கலையாது விரித்து விடவும். எண்ணெய் ஊற்றாமல் புரோட்டாவை தோசை சட்டியில் போட்டு சிறு தீயில் வாட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு வாட்டிய புரோட்டாக்களை 2 தினம் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது - காற்றுப் புகாத பாலிதீன் பைகளில் ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவையான சமயம் பயன்படுத்தலாம். இந்த வறண்ட புரோட்டாக்களை பூரி மாதிரி, குழிந்த வாணலியில் நிறைய எண்ணெய் விட்டு சுட்டால் பொங்கிப் பொங்கி வரும். இம்மாதிரி இருமுறை - முதலில் வெறும் தோசைச் சட்டியிலும், மற்றொரு முறை எண்ணெயிலும் - பொரிப்பதால் புரோட்டாவின் உள்பக்கமும் வெந்து சுவையானதாக இருக்கும்.