பயத்தம்பருப்பு டோஸ்ட்-இன் புகைப்படம், தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

பயத்தம்பருப்பு டோஸ்ட்

சைவம்

வெண்ணெய் தடவிய ரொட்டியின் மேல் புதினா சட்னி, மசாலா பாசிப்பருப்பு விழுது பூசி பூரணப் பக்கம் கீழே வைத்து பொரிக்கப்படும் டோஸ்ட்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 12 துண்டுகள் ரொட்டி
  • 6 பச்சை மிளகாய் (சட்னிக்கு)
  • 1 கட்டு கொத்தமல்லித் தழை (சட்னிக்கு)
  • சிறிது / 1 எலுமிச்சம் சாறு (அ) மாங்காய்த் துண்டு (சட்னிக்கு)
  • 1/2 டீஸ்பூன் சீரகம் (சட்னிக்கு)
  • தேவைக்கேற்ப உப்பு (சட்னிக்கு)
  • தேவைக்கேற்ப சர்க்கரை (சட்னிக்கு)
  • 1/2 டீஸ்பூன் சோம்பு (கரகரப்பாக அரைக்க)
  • 1/2 அங்குலத் துண்டு இஞ்சி (கரகரப்பாக அரைக்க)
  • 4 பச்சை மிளகாய் (கரகரப்பாக அரைக்க)
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி (கரகரப்பாக அரைக்க)
  • தேவைக்கேற்ப உப்பு (கரகரப்பாக அரைக்க)
  • 1 கப் பயத்தம் பருப்பு (2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்)
  • வெண்ணெய் (ரொட்டியின் மேல் தடவ)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சம் சாறு (அ) மாங்காய்த் துண்டு, சீரகம், உப்பு, சர்க்கரை சேர்த்து சட்னியாக அரைக்கவும்.
  2. ஊறவைத்த பயத்தம் பருப்போடு சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ரொட்டித் துண்டுகளின் இருபுறமும் வெண்ணெய் தடவவும்.
  4. ஒரு பக்கம் வெண்ணெயின் மேல் சட்னியைத் தடவி அதன்மேல் சிறிதளவு பயத்தம் பருப்பு விழுதைப் பூசவும்.
  5. வாணலி அல்லது ஒரு சிறிய அகலமான பானில் (Pan) எண்ணெய் விட்டுச் சூடாக்கி பருப்பு பூசிய பாகம் கீழே எண்ணெயில் முதலில் இருக்கும்படி ரொட்டித் துண்டைப் போட்டு பொரிக்கவும்.
  6. கீழ்ப்பாகம் சிவக்க வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக ரொட்டி பொரிந்ததும் எடுத்து எண்ணெயை நன்றாக வடியவிட்டு சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.