
மெதுவடை
சைவம்நுரைக்க அரைத்த உளுந்து மாவை கையால் வளையமாக வடிவமைத்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் தென்னிந்திய பாரம்பரிய மெதுவடை.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1 கப் முழுவெள்ளை உளுந்து
- 1 டீஸ்பூன் கல் உப்பு (குவித்து)
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- எண்ணெய் (தேவைக்கேற்ப)
செய்முறை
- உளுந்தைக் கழுவி முழுகும்வரை தண்ணீர்விட்டு 1½ அல்லது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறியபின் தண்ணீரை வடித்து விட்டு நன்றாக நுரைக்க, கெட்டியாக அரைக்கவும். அரைக்கும்போது சிறிதளவே தண்ணீர் தெளிக்கவும். (கிரைண்டரில் அரைக்கும் மாவில் வடை நன்றாக வரும். மிக்ஸியில் அரைத்தால் அரைத்தபின் கைகளால் நன்கு காற்று உள்ளேபோய் மாவு நல்ல பதத்திற்கு வரும்படி கலந்துவிடவும்.)
- கடைசியில் மாவைக் கல்லில் இருந்து எடுப்பதற்கு முன் உப்பு போட்டு 1 நிமிடம் அரைக்கவும். (முன்பே உப்பு சேர்த்தால் வடை கெட்டியாக இருக்கும்.)
- வாணலியில் முக்கால் பாகம் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். (சிறிதளவே மாவை எண்ணெயில் போட்டால் உடனே எழும்பி மேலே வந்தால் எண்ணெய்க் காய்ச்சல் சரியான பதம் என்று கொள்ளவும்.)
- கைகளை தண்ணீரில் நனைத்து சிறிதளவு மாவு எடுத்து ஒரு ஈரத்துணி அல்லது பாலிதீன் கவரின் மேல்பாகத்தில் தட்டி மத்தியில் ஒரு ஓட்டை போடவும்.
- இடது கையால் கீழுள்ள துணியைத் தூக்கி வலது கையால் தட்டிய வடையை கைகளில் சாய்த்து எண்ணெயில் போடவும்.
- வாணலியில் உள்ள எண்ணெய் கொள்ளுமளவிற்கு வடைகளை தட்டிப் போடவும்.
- கீழ்ப்பாகம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வடிதட்டில் ஒரு நிமிடம் வடியவிட்டு சூடாகப் பரிமாறவும்.
- இந்த வடையை இட்லி, சாம்பார், சட்னியோடு பரிமாறவும்.
- கவனிக்க: மாவை அரைத்த உடனேயே வடை சுட வேண்டும், புளிக்கவிடக் கூடாது. ப்ரிஜ்ஜில் வைத்தால் 5 அல்லது 6 மணி நேரம் வரை மாவை வைக்கலாம். வடை எண்ணெய் குடிக்காமலிருக்க பொரிக்கும்போது சிறிதளவே அரிசிமாவு சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ஆழாக்குக்கு 1 பிடி துவரம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்தால் அவ்வளவாக எண்ணெய் குடிக்காது.
- மாற்று செய்முறை -- இதே வடைமாவை உபயோகப்படுத்தி பலவிதமாக வடை தட்டலாம்: (1) கார வடை: ஒரு சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய துண்டு பெருங்காயம் இவற்றை நைசாக அரைத்து மாவில் சேர்த்துக் கலந்து வடை போடவும். (2) வெங்காய வடை: மிகுதியான வடை மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் கலந்து வடை போடவும். (3) வெஜிடபிள் வடை: வெங்காயத்தோடு மிகப் பொடியாக அரிந்த கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்து வடை சுடலாம். (4) கீரை வடை: பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் விழுதோடு அரைக்கீரை அல்லது முளைக்கீரை கலந்து வடை சுடவும். (5) ரச வடை: பருப்பு ரசத்தைச் சூடாக்கி அதில் பொரித்த உளுந்து வடையைப் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து, பரிமாறும்போது சிறிது பொடியாக அரிந்த வெங்காயம், கொத்தமல்லி தூவவும். (6) சாம்பார் வடை: வெங்காய சாம்பார் செய்து கொள்ளவும். வடையைப் பொரித்ததும் ஒரு வினாடி சூடான தண்ணீரில் முக்கி எடுத்து உடனே சூடான சாம்பாரில் போட்டு ஊற வைக்கவும். பரிமாறும்போது பொடியாக அரிந்த வெங்காயம் மேலே தூவி பரிமாறவும்.