
வெங்காய பக்கோடா
சைவம்நெய் தேய்த்த கடலைமாவு-அரிசிமாவை வெங்காயம், பச்சை மிளகாயுடன் கைகளால் நொறுக்கி நேரடியாக எண்ணெயில் போட்டு பொரிக்கப்படும் மொறுமொறுப்பான பக்கோடா.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 1 கப் அரிசி மாவு
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 சிட்டிகை சமையல் சோடா
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 3 (அ) 4 பெரிய வெங்காயம் (நீளவாக்கில் அரியவும்)
- 4 பச்சை மிளகாய் (நீளவாக்கில் அரியவும்)
- தேவைக்கேற்ப உப்பு
- 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- மாவு வகைகளை ஒன்றாகச் சேர்த்து சலித்து மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
- ஒரு அகலமான பேசினில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களினால் நன்றாகத் நுரைக்கத் தேய்க்கவும்.
- நெய் நுரைத்து வந்ததும் சலித்த மாவை அதில் சேர்த்து, நெய் மாவோடு நன்கு கலக்கும்படி பிசறி விடவும்.
- இதோடு நீளமாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
- ஒரு அகல வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.
- கலந்த மாவை 4 அல்லது 5 பாகங்களாகப் பிரிக்கவும்.
- முதல் பாகத்தில் சிறிதளவே தண்ணீர் தெளித்து மாவு ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளும்படி கலக்கவும். கைகளினால் மாவை சூடான எண்ணெயில் பிசறிவிட்டு பொரிக்கவும் (பெரிய பெரிய துண்டங்களாக எண்ணெயில் விழும்படி செய்யவும்).
- பக்கோடா பொன்னிறமானதும் வடிதட்டியில் வடியவிட்டு சூடாகப் பரிமாறவும்.
- குறிப்பு: ஒவ்வொரு தடவையும் பொரிப்பதற்கு முன்தான் தண்ணீர் தெளித்து கலக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால் பக்கோடா மெத்தென்று ஆகிவிடும்.
- மாற்று செய்முறை: (1) மெதுபக்கோடா: அரிசி மாவு 1/2 கப்பாகக் குறைக்கவும். பக்கோடா போடும்போது கொஞ்சம் தண்ணீர் அதிகம் தெளித்து தளர்த்தியாகக் கலக்கவும். (2) முந்திரிப்பருப்பு பக்கோடா: வெங்காயத்தை சேர்க்காமல், முந்திரியை மட்டும் பொடித்துப் போட்டு கொத்தமல்லித் தழை அரிந்து சேர்த்து பக்கோடா போடவும். (3) புதினா பக்கோடா: சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டு, சிறிது சோம்பு பொடி சேர்த்து புதினா, கொத்தமல்லித் தழை அரிந்து சேர்த்து பக்கோடா போடவும் -- இதற்கு வெங்காயம் போடவேண்டாம்.
- பொது குறிப்பு: மாவில் (மைதா, அரிசி மாவு, கடலை மாவு) ஈரத்தன்மை இருந்தால் அதிக நாட்கள் பாட்டிலில் வைத்திருக்கும்போது சீக்கிரம் கெட வாய்ப்புகள் அதிகம். ஒரு பிரியாணி இலையை மத்தியில் சொருகி வைத்தால் ஈரத்தன்மையை இலை உறிஞ்சி விடுவதால் மாவு சீக்கிரம் கெட்டுப் போகாது.