தயிர் வடை-இன் புகைப்படம், தயிரில் ஊற வைத்து தாளிக்கப்பட்டது

தயிர் வடை

சைவம்

புதிதாக பொரித்த உளுந்து வடையை தேங்காய்-மிளகாய் அரைத்த மசாலா தயிரில் ஊற வைத்து மென்மையாக்கப்படும் தயிர் வடை.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1 கப் முழு உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 3 கப் கெட்டியான தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் (அரைக்க)
  • 8 முந்திரி (அரைக்க)
  • 8 (அ) 10 பச்சை மிளகாய் (அரைக்க)
  • தேவைக்கேற்ப உப்பு (அரைக்க)

செய்முறை

  1. பருப்பைக் கழுவி தேவையான தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை வடித்து விட்டு நைசாக அரைத்து உப்பு சேர்த்து, மெதுவடையில் கூறியபடி மத்தியில் ஓட்டை போட்டு பொரிக்கவும்.
  3. தயிரைக் கடைந்து, அரைத்த விழுதைச் சேர்த்து கலந்து ஒரு அகலமான பேசின் போன்ற பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சிறிது கடுகு தாளித்து அதில் கொட்டி, கொத்தமல்லித் தழை போடவும்.
  4. வடைகளை சூடாகப் பொரித்தவுடன் இளம்சூடான தண்ணீரில் முக்கி, உடனே எடுத்து தயிரில் போடவும்.
  5. எல்லா வடைகளையும் பொரித்துச் சேர்த்தபின் 3 மணி நேரமாவது ஊற வைக்கவும்.
  6. பரிமாறும்போது வடைகளை அலுங்காமல் ஒரு தட்டையான கரண்டியால் எடுத்து தட்டில் வைத்து மேலே சிறிது அந்த ஊறவைத்த தயிரையே ஊற்றி விருப்பப்படி அலங்கரித்து பரிமாறவும்.
  7. மேலே அலங்கரிக்கும் முறை: (1) வடையை பரிமாறும் தட்டில் வைத்து மேலே சிறிது தயிர் ஊற்றி பொரித்த காரா பூந்தி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். (2) துருவிய கேரட் மற்றும் வறுத்த கிஸ்மிஸ் மேலே அலங்கரிக்கலாம். (3) பொடித்த கருப்பு உப்பு (Kala Namak) மற்றும் வறுத்த சீரகப் பொடி, உப்பு, மிளகாய்த் தூள் அவரவர் விருப்பப்படி மேலே தூவி, வடையைச் சுற்றி துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லித் தழையை மாற்றி மாற்றி வட்டவடிவமாக அலங்காரமாகத் தூவி பரிமாறலாம்.
  8. குறிப்பு: தயிரில் ஊறவைத்த வடையை 4 மணி நேரத்திலேயே உபயோகப்படுத்திவிட வேண்டும். இல்லாவிடில் தயிர் புளித்து விடும்.