காலிப்ளவர் ஃபிரிட்டர்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

காலிப்ளவர் ஃபிரிட்டர்ஸ்

சைவம்

வேக வைத்த காலிப்ளவர் பூக்களை மசாலா மைதா மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் ஃபிரிட்டர்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 காலிப்ளவர் (பெரியது)
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • தேவையான அளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1/2 கப் மைதா மாவு
  • 1/2 கப் ரஸ்க் பொடி (அ) காய்ந்த ரொட்டித் தூள்
  • எண்ணெய் (தேவையான அளவு)

செய்முறை

  1. காலிப்ளவரை பெரிய துண்டங்களாக்கவும் நன்றாகக் கழுவவும். ஒரு அகலக் கிண்ணத்தில் தண்ணீரைச் சூடாக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  2. தண்ணீர் கொதிவரும் போது காலிப்ளவர் துண்டங்களைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடியால் 10 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஒரு துணியின் மேல் பரப்பி ஆற வைக்கவும்.
  3. மைதா மாவில் உப்பு, மிளகாய்த் தூள் கரம்மசாலாத் தூள் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கலக்கவும்.
  4. காலிப்ளவர் துண்டங்களை ஒவ்வொன்றாக இதில் முக்கி எடுத்து பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  5. காலிப்ளவரை உபயோகித்து இதைப் போல பலவித ருசிகரமான தின்பண்டங்கள் தயாரிக்கலாம். மாதிரிக்கு சில குறிப்புகள்: (1) சுடுதண்ணீரில் காலிப்ளவரை போட்டு எடுத்ததும், துடைத்துவிட்டு அப்படியே பொரித்து உப்பு, மிளகாய்த் தூள் தூவி பரிமாறவும். (2) முந்திரி, கசகசா, பொட்டுக்கடலை, உப்பு, சோம்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதோடு சிறிது அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து கலந்து, சுடுதண்ணீரில் போட்டு எடுத்த காலிப்ளவர் துண்டங்களை இந்த மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து சூடாகப் பரிமாறவும். (3) சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், ஊறவைத்த புளி, தேங்காய், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், சிறிது ஊறவைத்த பச்சரிசி, உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்த காலிப்ளவரை இக்கலவையில் முக்கி எடுத்து பொரிக்கவும்.
  6. குறிப்பு: ஒரு சில காலிப்ளவரில் புழுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். எவ்வளவு கழுவினாலும் போகாது. அதற்கு காலிப்ளவர் துண்டங்களை இளஞ்சூடான தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து 10 நிமிடம் போட்டு வைத்திருந்து பிறகு கழுவினால் புழுக்கள் வெளியே வந்துவிடும்.