பீட்ரூட் கட்லெட்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பீட்ரூட் கட்லெட்

சைவம்

மசாலாவுடன் வதக்கிய பீட்ரூட் துருவலை மசித்த உருளைக்கிழங்குடன் கலந்து மெல்லிய கட்லெட் வடிவில் தோசைக்கல்லில் பொன்னிறமாக சுடப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 3 பீட்ரூட்
  • 2 பெரிய வெங்காயம் (பொடியாக அரியவும்)
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 3/4 டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • 1/2 டீஸ்பூன் காய்ந்த மாங்காய் பொடி
  • 1/2 கப் காய்ந்த ரொட்டித் தூள்
  • எண்ணெய் (சுடுவதற்கு)

செய்முறை

  1. குக்கரின் அடிப்பாத்திரத்தில் உருளைக்கிழங்கில் தண்ணீர் விட்டு, மேல் பாத்திரத்தில் தோல் சீவிய முழு பீட்ரூட்டையும் அப்படியே வைத்து 7 நிமிடம் (வெயிட் வைத்தபிறகு) வேக வைக்கவும். பீட்ரூட்டை வெந்தபின் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல்சீவி மசிக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கடைசியில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. வதங்கியதும், தனியாத் தூள், கரம்மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும். ஒரு நிமிடம் வதக்கியதும், துருவிய பீட்ரூட் சேர்த்து ஈரம் வற்றும் வரை கலக்கவும்.
  4. வெந்த உருளைக்கிழங்கு, உப்பு, மாங்காய்த் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கலந்து இறக்கவும். பாதி பிரட் தூளை இதில் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்ட வடிவத்தில் கட்லெட்டை மெலிதாக செய்து கொள்ளவும். மேலே புரட்டுவதற்கு மீதியுள்ள பிரட் தூளை உபயோகப்படுத்தவும்.
  5. எண்ணெய் அதிகமாக விட்டு தோசைக் கல்லில் இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டுச் சூடாகப் பரிமாறவும்.