வாழைக்காய் கட்லெட்-இன் புகைப்படம், தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

வாழைக்காய் கட்லெட்

சைவம்

வாழைக்காயையும் உருளைக்கிழங்கையும் வேகவைத்து மசாலாவுடன் வதக்கி, ரொட்டித் தூளில் பொதிந்து பொன்னிறமாக தோசைக்கல்லில் சுடப்படும் கட்லெட்.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 2 வாழைக்காய் (பெரியது)
  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 1 கட்டு கொத்தமல்லித் தழை
  • 1 அங்குலத் துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் கரம்மசாலாப் பொடி
  • 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி
  • எண்ணெய் (சுடுவதற்குத் தேவையான அளவு)
  • 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு

செய்முறை

  1. பிரஷர் குக்கரில் அடிப் பாத்திரத்தில் உருளைக்கிழங்கில் தண்ணீர் விட்டும் மேல் பாத்திரத்தில் முழு வாழைக்காயைத் தோலோடு அப்படியே வைத்தும் வேக வைக்கவும்.
  2. வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசிக்கவும். வாழைக்காயின் தோலை எடுத்துவிட்டு ஸ்டீல் துருவியால் துருவவும்.
  3. வெங்காயத்தை துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை இடித்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து இஞ்சி மிளகாய் விழுது சேர்த்து கலந்து அரிந்த வெங்காயம் சேர்க்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் துருவிய வாழைக்காய் சேர்த்து நன்கு சிகப்பாகும்வரை கலக்கவும்.
  6. மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கரம்மசாலாத் தூள், அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
  7. அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் மாங்காய்த் தூள், மைதா மாவு, பாதி ரொட்டித் தூள் சேர்த்து பிசையவும்.
  8. உருண்டைகளாக உருட்டி மக்காச்சோள மாவு, மற்ற பாதி ரொட்டித் தூள் கலந்து வைத்துள்ள கலவையில் புரட்டி, கட்லெட் போல தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாகச் சுடவும். சூடாக சாஸுடன் பரிமாறவும்.
  9. குறிப்பு -- இதேபோல் பலவிதமான கட்லெட் செய்யலாம். (1) கத்திரிக்காய் கட்லெட்: பெரிய கத்திரிக்காயின் மேல் எண்ணெய் பூசி நேரடி அனலில் மேல்தோல் கருப்பாகும்வரை திருப்பிவிட்டு சுடவும் (அல்லது குக்கரில் ஆவியில் தண்ணீர் சேர்க்காமல் 15 நிமிடம் வேக வைக்கவும்). வாழைக்காய்க்குப் பதில் இந்த சுட்ட கத்திரிக்காயை மசித்துச் சேர்த்து அதே முறையில் செய்யவும்; மாங்காய்த் தூளுக்குப் பதில் சிறிதளவு கெட்டியான புளிக்கரைசல் சேர்க்கலாம். (2) பனீர் கட்லெட்: திரித்த பாலிலிருந்து தயாரித்த பனீரை கைகளால் உதிர்த்து, சிறிது அரிசி மாவு, மைதா மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம், மிளகாய் விழுது அல்லது மிளகாய்த் தூள், மசாலாத் தூள் சேர்த்து மற்ற கட்லெட் போல செய்யவும். (3) மக்காச்சோள டிக்கிஸ்: வேகவைத்து உரித்த மக்காச்சோளத்தை பச்சைமிளகாய், கொத்தமல்லியுடன் கரகரப்பாகக் கரைத்து, வதக்கிய வெங்காயம்-கோஸுடன் கலந்து, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து விருப்பப்படி காரம்-உப்பு-மசாலா சேர்த்துச் செய்யவும். (4) ரவை, கீரை கட்லெட்: வறுத்த ரவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம்-கீரை, உப்பு-காரம்-மசாலா சேர்த்துச் செய்யவும். (5) முளைபயறு கட்லெட்: ஆவியில் வேகவைத்த முளைப் பாசிப்பயற்றுடன் வதக்கிய வெங்காயம்-தக்காளி-இஞ்சிப்பூண்டு-மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, பிரட் சேர்த்துச் செய்யவும். (6) சேமியா கட்லெட்: வெஜிடபிள் கட்லெட் தயாரித்து, நெய்யில் லேசாக வறுத்து சுடுநீரில் ஊற்றி வடித்த சேமியாவில் புரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுடவும்.