
ஆலூ டிக்கி
சைவம்மசாலா மசித்த உருளைக்கிழங்கு உருண்டைக்குள் தக்காளி-பட்டாணி மசாலா நிரப்பி தட்டையாக்கி பொன்னிறமாக பொரிக்கப்படும் டிக்கி.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்
பொருட்கள்
- 1 கிலோ உருளைக்கிழங்கு
- 1/4 கிலோ பட்டாணி (அல்லது காலிப்ளவர்-1)
- 3 தக்காளி
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 ரொட்டி (முழு ரொட்டி)
- 1 புதினா தழை (சிறிய கட்டு)
- 1 கொத்தமல்லித் தழை (சிறிய கட்டு)
- தேவைக்கேற்ப உப்பு
- 2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 1 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
- எண்ணெய் (சுடுவதற்கு)
செய்முறை
- உருளைக்கிழங்கையும், உரித்த பட்டாணியையும் வேக வைக்கவும். வெந்த கிழங்கை தோலுரித்து கட்டியில்லாமல் மசிக்கவும்.
- ரொட்டித் துண்டங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு பிழிந்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதோடு உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள், பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாகப் பிசையவும்.
- தக்காளியை கொதிநீரில் போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து, தோலுரித்து அரைத்து வடிகட்டவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி விழுது, உப்பு, சிறிது மிளகாய்த் தூள், கரம்மசாலாத் தூள், வெந்த பட்டாணி சேர்க்கவும். ஈரம் முழுவதும் வற்றியதும் கீழே இறக்கவும்.
- தயாரித்த உருளைக்கிழங்கு மாவிலிருந்து ஆரஞ்சு அளவு உருண்டைகள் தயாரிக்கவும். குழி செய்து மத்தியில் சிறிதளவு பட்டாணி மசாலா வைத்து மூடி மறுபடியும் உருண்டை செய்யவும்.
- கையால் உருண்டையைத் தட்டையாக்கி கட்லெட் போல தயாரிக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் (தோசைக் கல்லில் எண்ணெய் விட்டும் சுடலாம்).
- பரிமாறும் போது தக்காளி சாஸ் அல்லது இனிப்பு சட்னி, புதினா சட்னியோடு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சூடாகப் பரிமாறவும். (இனிப்பு சட்னி: பானிபூரி செய்முறையில் காண்க. புதினா சட்னி: இப் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் காண்க.)
- மாற்று செய்முறை: பட்டாணிக்குப் பதில் காலிப்ளவர் அல்லது முழு பச்சைப் பயறு உபயோகப்படுத்தியும் உள்ளே வைக்கும் பூரணம் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதில் இஞ்சி பச்சை மிளகாய் விழுது சேர்த்து உருளைக்கிழங்குடன் பிசைந்து டிக்கி செய்யலாம். உள்ளே பூரணம் வைக்காமலும் செய்யலாம்.