
பஞ்சாபி சமோசா
சைவம்வெண்ணெய் கலந்த மைதா மாவால் செய்த கூம்பு வடிவ பொட்டலங்களில் மசாலா உருளைக்கிழங்கு-பட்டாணி பூரணம் நிரப்பி பொன்னிறமாக பொரிக்கப்படும் சமோசா.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கப் மைதா (குவித்து)
- 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 60 கிராம் வெண்ணெய் (2 டேபிள் ஸ்பூன் குவித்து)
- 1/2 டீஸ்பூன் உப்பு
- ஐஸ் தண்ணீர் (மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு)
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 4 உருளைக்கிழங்கு (வேக வைத்தது)
- 1/4 கப் வேகவைத்த பட்டாணி
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் தனியா பொடி
- 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய்த் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்
- 1 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது
- தேவையான அளவு உப்பு
- 1/2 டீஸ்பூன் காலா நமக் (கருப்பு உப்பு)
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
- 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
செய்முறை
- மேல்மாவு தயாரிக்கும் விதம்: மைதா மாவை பேகிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும். இதனுடன் வெண்ணெயைச் சேர்த்து மாவோடு சேரும்படி கலக்கவும். கடைசியில் ஐஸ் தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசையவும். மாவை நன்கு அடித்துப் பிசைந்து ஈரத்துணி கொண்டு 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- மசாலா செய்யும் விதம்: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி மிளகாய் விழுது சேர்க்கவும். பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். கடைசியில் தனியா பொடி, கரம்மசாலா பொடி, விருப்பப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து, வேக வைத்த பட்டாணியோடு வாணலியில் சேர்க்கவும். நன்கு வாசனை வரும்படி கலந்து மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள், மாங்காய்த் தூள், கருப்பு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சை அளவு உருண்டைகள் பிடிக்கவும்.
- சமோசா செய்முறை: பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக்கவும். நீள வாக்கில் (Oblong) வரும்படி சப்பாத்திகளாக இடவும் (சிறிது கனமாக). நடுவில் இரண்டாக சப்பாத்திகளை வெட்டவும். சிறிது தண்ணீரை ஓரம் முழுவதும் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை மத்தியில் கொண்டு வந்து முக்கோணம் போல ஒட்டவும். முக்கோண பொட்டலத்தின் மத்தியில் மசாலா உருண்டையை வைக்கவும். ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும். எல்லா சமோசாக்களையும் இதே போல செய்து ஈரத்துணி கொண்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
- மிதமான சூட்டில் எண்ணெயைச் சூடாக்கி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். புதினா சட்னி, இனிப்பு சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும். (இனிப்பு சட்னி: பானிபூரி செய்முறைக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.)